1. Home
  2. தமிழ்நாடு

எனக்கு சிவராமன் மற்றும் அவரது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருக்கு - அண்ணாமலை..!

1

பர்கூரில் தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலி என்.சி.சி. பயிற்றுநர் கைது செய்யப்பட்டார். நேற்று இவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதேவேளையில், நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் சிவராமனின் தந்தையும் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சிவராமன் மற்றும் அவரது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like