1. Home
  2. தமிழ்நாடு

ஓட்டுப் போட மாட்டேங்கிறாங்க...வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காதீங்க.. : தமிழிசை சௌந்தர்ராஜன்..!

1

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சென்னை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மத்திய சென்னையில்தான் மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதேபோல தென் சென்னையிலும் 60 சதவீதம் கூட வாக்குப் பதிவு நடக்கவில்லை. 

இது தொடர்பாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதன் மூலம் நேர்மையானவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் நடைமுறை. ஆனால் இங்கே உள்ள திமுக அரசு அவர்களுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ உடனே அவர்கள் மாற்றுப் பாதையை கடைபிடிப்பது வழக்கம். அதேபோல் தென் சென்னையிலும், மயிலாப்பூரிலும் 13வது வாக்குச்சாவடி 122 வது வட்டத்தில், 50 பேர் உள்ளே புகுந்து அங்குள்ள ஏஜென்ட் ஐ அடித்து துரத்தி கள்ள ஓட்டு போட முயற்சி செய்தார்கள். 

அதற்குப் பின்பு போலீஸ் அப்சர்வருக்கு  எங்களது செயலாளர் தியாகராஜன் அதற்காக புகார் அளித்து, அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது .ஆனால் அதற்கு முன்பாகவே எங்கள் ஏஜெண்டுகள் 50 பேரை அனுப்பி விட்டார்கள். அதனால் அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு கேட்டிருக்கிறோம். இதுபோன்று பல வாக்குச்சாவடிகளில் நடந்தது. சாலிகிராமத்தில் நடந்தது. சோளிங்கநல்லூரிலும் நடந்தது. அதேபோல் சில இடங்களில் கொத்துக் கொத்தாக வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக தி நகரில் 119,200,201,202 இந்த வாக்குச்சாவடியில் ஆயிரக்கணக்கான வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆக தேர்தல் ஆணையம் இதில் கவனம் செலுத்த வேண்டும். திமுக இதுபோல அராஜகத்தில் ஈடுபடக்கூடாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள், வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்படுகிறது.  தொடர்ச்சியாக, கூட இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது. இதை ஒரு விடுமுறையாக எடுத்துக் கொள்கின்றனர். வாக்கு செலுத்த வேண்டும் என்ற விதிமுறை மாறி, அது கொண்டாட்ட விடுமுறையாக மாற்றப்படுகிறது. ஏற்கனவே தேசிய வாக்காளர் தினத்தில் நான் ஆளுநராக இருக்கும்போது பேசி இருந்தேன். எனவே வெள்ளிக்கிழமையும், திங்கட்கிழமையும், தயவு செய்து தேர்தல் நாளை பிக்ஸ் பண்ணாதீர்கள். நடுவில் அதாவது புதன்கிழமை அல்லது வியாழனில் வைப்பது நல்லது என கோரிக்கை வைத்திருந்தேன். அதை பரிசீலித்தால் நல்லது என நான் நினைக்கிறேன். 

அதே மாதிரி 100 சதவீதம் வாக்களிப்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரப்படுத்துகிறார்கள். அதற்கு எந்த பயனும் இல்லை என்பதை சென்னை போன்ற வாக்குப்பதிவு நமக்கு காண்பிக்கிறது. இப்படி கோடிக்கணக்கில் செலவு செய்த மக்களுக்கு புரியாமல் விளம்பரப்படுத்துவதை விட, மக்களுக்கான வாக்குகள் இருக்கிறதா என மறுபடியும் மறுபடியும் சரி பார்த்து வாக்காளர் பட்டியலில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வாக்களிப்பது வலிமையானது. ஆனால் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட முடியவில்லை என்பது வலியான விஷயம். டெண்டர் ஓட்டு, சேலஞ்ச் ஓட்டு என பல இடங்களில் இருப்பது என்பது தெரியவில்லை. வாக்குரிமை மறுக்கப்பட்டால் 49ன் படி வாக்குரிமை சட்டத்தை பயன்படுத்தலாம் என்ற நடைமுறையை சரி செய்திருக்க வேண்டும். 

இது தவிர இவ்வளவு பெரிய மாநிலத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் ஒரு சுமூகமான தேர்தல் நடைபெற்று இருக்கிறது. வாக்காளரின் பெயர், வாக்குச்சாவடிகளில் இல்லாமல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை எனக் கூறினார்

Trending News

Latest News

You May Like