பாஜக கதைகளை எல்லாம் சொல்லி இந்த அவையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை - முதல்வர்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் பகுதியில் சாலையோரம் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசையும், காவல்துறையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனில் பேசியபோது “சார்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாரெனப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் தெரிவித்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, யார் அந்தச் சார்? எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம்குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் பதில்:
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இந்த விவாதத்தின் மீது பேசினர். அதற்குப் பதில் அளித்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசினர். இதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள்.
யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவருக்குச் சட்டப்படி நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும், என்பதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. குற்றம் நடந்தபிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யாமல் விட்டிருந்தால், அல்லது குற்றவாளியைக் காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லலாம்.
யார் அந்த Sir?
ஆனால் சில மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்தபிறகும், குற்றம் தொடர்புடைய ஆதாரங்களை எல்லாம் திரட்டியபிறகும், அரசைக் குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செயல்படுவதில்லை.
முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு ‘யார் அந்த சார்?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்போது இந்தப் புகாரை விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தப் புலன்விசாரணையில் வேறு யாராவது குற்றவாளி இருப்பதாகத் தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அது யாராக இருந்தாலும் சரி அவர்கள்மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை நூறு சதவீதம் உறுதியோடு கூறுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சொல்லுங்க:
நான் எதிர்க்கட்சிகளைக் கேட்க விரும்புவது, யார் அந்த சார்? குற்றம்சாட்டுகிறீர்களே, உண்மையாகவே அதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கூறுங்கள்.
அதை யார் தடுக்கப்போகிறார்கள். அதைவிடுத்து ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில், வீண் விளம்பரம், குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.
இந்த அரசுப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்துப் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாதது போன்ற ஒரு சதி திட்டத்தை உருவாக்கப் பலர் முயற்சிக்கின்றனர்.
இது மக்கள் மத்தியில் நிச்சயமாக எடுபடாது. காரணம், பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
பாஜக கதைகளைச் சொல்லி:
அதே போன்று, இந்த வழக்குபற்றிப் பாஜகவினர் பொதுவெளியில் பேசியிருக்கிறார்கள், தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக கதைகளை எல்லாம் சொல்லி, இந்த அவையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அரசுமீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது, பொறுப்பினை உணர்ந்து பேசு வேண்டும்.
உயர்நீதிமன்றம் அமைத்திருக்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை முழு வீச்சில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடும் நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.