போலீஸ் வேலையே வேணாம்; டி.ஜி.பி.,க்கு ஏட்டு கடிதம்..!
சிவகிரி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர், வெறும் கம்ப்யூட்டர் பில்களை மட்டும் வைத்துக் கொண்டு, கனிமவளங்களைக் கொள்ளையடித்து வருவதை கண்டு பிடித்துள்ளார். அப்படி, மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, காவல்நிலையம் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி இரசீதுகளை தயார் செய்து, சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவிப்பதாக பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்லும் போது, இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே, கொள்ளை கும்பல் தன்னை மிரட்டி, வாகனங்களை எடுத்துச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மணல் மாபியாக்களுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் வாங்கி குவித்துக் கொள்வதாக குற்றம்சாட்டிய பிரபாகரன், கனிம வளக் கொள்ளை அதிகம் நடக்கும் சிவகிரியில் உயிருக்கு அச்சுறுத்தலோடு பணியாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
எனவே, தன்னை போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கக்கோரி டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார். மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த மறுநாளே, தனக்கு வேறு பணி கொடுக்கப்பட்டதாகவும் அவர் அதில் குற்றம்சாட்டியுள்ளார். காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல் உயரதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வாகனங்களை கடத்திச் சென்ற விக்னேஷ் பி.எல்.ஆர் மற்றும் தாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தன் மீது வன்முறை தாக்குதலோ, வாகன தாக்குதலோ நடந்தால், அதற்கு முழுக் காரணம் தென்காசி காவல் கண்காணிப்பாளரும், சப்டிவிஷன் அதிகாரிகளும், மணல் மாபியாக்களுக்கு தான் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.