இப்படி ஒரு நிலை யாருக்கும் வர கூடாது..! குண்டும் குழியுமாக இருந்த சாலையால் காதலன் மடியில் துடிதுடித்து உயிரிழந்த காதலி..!

சென்னையை சேர்ந்தவர் காமேஷ் (25). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா (21) என்பவர் இருங்காடு கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். காமேஷ் மற்றும் நிஷா இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இன்று இருவரும் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து கிளம்பிய அவர்கள் வேலைக்கு செல்லாமல் கோவளம் கடற்கரைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வண்டலூர்-கேளம்பாக்கம் வழியாக சென்றுக்கொண்டிருந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தார் சாலையில் குண்டும் குழியுமாக இருந்ததாலும் சாலையில் மணல் சிதறி இருந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடிகள் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது தலையில் படுகாயமடைந்த நிஷாவை தூக்கி மடியில் வைத்து தண்ணீர் கொடுத்த போது துடிக்க துடிக்க காதலன் மடியில் பரிதாபமாக காதலி உயிரிழந்தார்.அதன் பின்னர் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிஷாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதலனான காமேஷிடம் லைசன்ஸ் இல்லை என்பதும் பின்னால் அமர்ந்திருந்த காதலி நிஷா ஹெல்மெட் அணியவில்லை என்பதும் தெரியவந்தது. அது மட்டும் இன்றி முக்கியமான பிரதான சாலைகளில் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் பள்ளம் மற்றும் சாலை ஓரங்களில் படிந்திருக்கும் மணல்களை அகற்றி நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.