பெண்களை தாயாக, சகோதரியாக பார்ப்பதில்லை... மாறாக போகப் பொருளாகவே பார்க்கின்றனர் - : வானதி சீனிவாசன்..!
இது தொழில்நுட்ப யுகம். எது செய்தாலும் வெளியே தெரிந்துவிடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்தத் தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது. பெண்கள் எவ்வளவுதான் படித்து அறிவில் சிறந்து விளங்கினாலும், உயரிய பொறுப்புகளில் இருந்தாலும் சில ஆண்களுக்கு, அவர்கள் போகப் பொருளாகவே தெரிகின்றனர். பெண்ணை தாயாக, சகோதரியாக, மகளாக பார்க்கத் தோன்றுவதில்லை.
மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக நடிகைகள் ஊடகங்களில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது. அரசும், தொழில் நிறுவனங்களும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.” என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.