லைக் பண்ணா பணம்... கோவை இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் மோசடி..!

கோவையை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(33). ஐ.டி. நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ராஜரேகா(27). இவரது வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் வீடியோக்களுக்கு லைக் கொடுத்தால் பணம் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வீடியோக்களுக்கு ராஜரேகா லைக் கொடுத்தார். இதனை தொடர்ந்து ராஜரேகா வங்கி கணக்கிற்கு ரூ.2,500-ஐ அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் அனுப்பிய தகவல்களுக்கு தொடர்ந்து ராஜரேகா பதில் அளித்துவந்தார்.
இந்நிலையில் ராஜரேகாவை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள், தங்களிடம் பணம் முதலீடுசெய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பி, ராஜரேகா அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 250-ஐ அனுப்பினார். ஆனால் லாப தொகையும் கொடுக்கவில்லை. அனுப்பிய பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து ராஜரேகா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.