காதலிக்கும் போது ஜாதி தெரியலை... கல்யாணம் பண்ணும் போது ஜாதி தெரியுதா சார்..!
விருத்தாசலம் பெருவருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கலியபெருமாள் மகன் பழனிசாமியும் (வயது 40) , கம்மாபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 29 வயது பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் நெருக்கமாக பழகியதால் அந்த பெண் கர்ப்பமானார்.
இதையறிந்த பழனிசாமி பெண்ணிடம் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பெண் கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பெண் பழனிசாமியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உன்னை திருமணம் செய்ய முடியாது என பழனிசாமி கூறியதாகவும், சக்திவேல் என்பவருடன் சேர்ந்து அந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சக்திவேல் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பழனிசாமியை கைது செய்தனர்.