இனி கவலையில்லை... உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டதா? எளிதாக டிராக் செய்யலாம்..!

செல்போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! கண்டுபிடிப்பது மிகவும் எளிது!
மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அக்கம்பக்கத்தில் தேடிப் பார்ப்பீர்கள்... மொபைல் எண்ணுக்கு போன் செய்து பார்ப்பீர்கள்... கடைசியாகக் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிப்பீர்கள். தற்போது இது எதுவுமே இல்லாமல், எளிதாக வலைதளம் மூலமாக `உங்கள் மொபைல் போன் எங்கே?' என்று கண்டுபிடித்துவிடலாம்.
மத்திய அரசு, மத்திய டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (CDoT) Central Equipment Identity Registry (CEIR) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் முக்கியமாக மொபைல் போனின் IMEI எண்ணை வைத்து செயல்படுகிறது.
ஒருவேளை உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டது என்றால் CEIR இணையதளத்தில் மொபைல் போனின் மாடல், IMEI எண், தொலைந்த இடம் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். இத்துடன் மொபைல் போன் திருடுபோனதாக புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலையும் பதிவிட வேண்டும். இந்தத் தகவல்களை வைத்து மொபைல் போன் 24 மணி நேரத்தில் டிராக் செய்யவும் முடியும்... மொபைல் போனை முடக்கவும் முடியும்.
ஒவ்வொரு கைபேசிக்கும் ஒரு தனித்துவமான 15 இலக்க IMEI (International Mobile Equipment Identity) எண் இருக்கும். இது கைபேசியின் ஆதார் எண் மாதிரி. இந்த எண் இருந்தால் தான் CEIR போர்ட்டலில் புகார் அளிக்க முடியும்.
IMEI எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?
கைபேசி வாங்கிய பெட்டியில் ஒரு ஸ்டிக்கரில் இருக்கும்.
கைபேசியின் பேட்டரி இருக்கும் இடத்தில் ஒரு ஸ்டிக்கரில் இருக்கும்.
கைபேசி உங்களிடம் இருந்தால் *#06# என்று டயல் செய்தால் திரையில் தோன்றும்.
CEIR போர்ட்டல் மூலம் புகார் அளிப்பது எப்படி?
- போலீஸ் புகார்: முதலில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் கைபேசி தொலைந்ததாக புகார் அளிக்க வேண்டும். FIR நகலை மறக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள்.
- CEIR போர்ட்டல்: CEIR போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
- விவரங்களை நிரப்புதல்: தொலைந்த கைபேசியின் IMEI எண், தொலைந்த சிம் கார்டு எண், போலீஸ் புகார் விவரங்கள் மற்றும் உங்கள் விவரங்களை சரியாக நிரப்புங்கள்.
- OTP சரிபார்ப்பு: உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளிட்டு உங்கள் கோரிக்கையை சரிபார்க்கவும்.
- உறுதிப்படுத்தல்: உங்கள் புகார் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதும், ஒரு குறிப்பு ஐடி கிடைக்கும். இதை பத்திரமாக குறித்துக்கொள்ளுங்கள்.
CEIR போர்ட்டலில் புகார் அளித்தவுடன், உங்கள் கைபேசி இந்தியாவில் எந்த நெட்வொர்க்கிலும் பயன்படுத்த முடியாதபடி முடக்கப்படும். இதனால் திருடப்பட்ட கைபேசியை விற்பனை செய்ய முடியாது. இது திருடர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும்.
கைபேசி கிடைத்துவிட்டால், அதே குறிப்பு ஐடியை பயன்படுத்தி CEIR போர்ட்டலில் இருந்து முடக்கத்தை நீக்கி கைபேசியை பயன்படுத்தலாம்.