1. Home
  2. தமிழ்நாடு

"என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை!" - மேடையிலே கண்கலங்கி அழுத ராமதாஸ் - தொண்டர்கள் அதிர்ச்சி

ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது வைத்த கடுமையான விமர்சனங்களும், மேடையிலேயே அவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையாக உடைந்து போன ராமதாஸ்

சென்னை அருகே நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய டாக்டர் ராமதாஸ், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் உருக்கமாகப் பேசினார். உரையின் ஒரு கட்டத்தில் நா தழுதழுக்க, கண்களில் நீர் மல்க அவர் பேசியதாவது, "அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும். அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன், மத்திய அமைச்சராக்கினேன். ஒரு தந்தையாக அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்தேன். ஆனால், இன்று அவர் சின்னச் சின்ன பையன்களை வைத்துக் கொண்டு என்னை அசிங்கப்படுத்துகிறார். அன்புமணியின் நினைப்பால் என் தூக்கம் கெடுகிறது. தூக்க மாத்திரை சாப்பிட்டும் எனக்கு தூக்கம் வரவில்லை."


அன்புமணிக்கும் தமக்கும் இடையிலான இந்த விரிசல், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்தார். வரும் 2026 தேர்தலில் அமையும் 'வெற்றிக் கூட்டணி', அன்புமணிக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் என்று அவர் எச்சரித்தார். "நான் அறிவிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நான் எதை நினைக்கிறேனோ அது நிச்சயமாக நடக்கும் சூழல் இப்போது கனிந்து வந்திருக்கிறது" என அவர் கூறினார்.

கட்சியின் நிறுவனரே மேடையில் கண்ணீர் விட்டு அழுததைக் கண்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பாமகவின் அடுத்தகட்டத் தலைமை குறித்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் அக்கட்சியின் எதிர்கால அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தரப்பிலிருந்து இந்த விமர்சனங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like