எடப்பாடி போல யார் காலிலும் விழுந்து நான் பதவி வாங்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இதனை வரவேற்க , எதிர்க்கட்சிகளோ கடும் விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், தன செயல்பாடுகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி துணை முதல்வரானதை விமர்சனம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தான் சாதாரண தொண்டராக இருந்து முதல்வர் நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும், அதிமுகவில்தான் இது சாத்தியம். திமுகவில் மன்னர் பரம்பரை போல வாரிசுகள் தான் பதவிக்கு வர முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
சென்னையில் மழை வரப்போகிறது என்று தெரிந்து இபிஎஸ் மக்களை சந்தித்து நிவாரணப் பணிகள் மேற்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால், விமானம் மூலம் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர்தான் திமுக அரசு செய்த சாதனைகள் என்ன என்று கேட்கிறார். பேருந்தில் செல்லும் மகளிர் மற்றும் மாணவ மாணவிகளிடம் சென்று திமுக செய்த சாதனை என்ன எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும். அவர்கள் சாதனைகளை பட்டியலிட்டுச் சொல்வார்கள். மக்களை சந்தித்து மக்களுடன் இருந்தால் தான் அவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன என்று தெரியும்.
நான் துணை முதல்வர் ஆனது குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். திமுக இளைஞரணிச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என்னுடைய பணிகள் மீது எடப்பாடி பழனிசாமியால் குறைகளோ குற்றச்சாட்டுகளோ கூற முடியவில்லை. அதே சமயம் அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வராகலாம் என்கிறார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சாதாரண தொண்டர் கிடையாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் காலில் விழுந்து அரசையே டெண்டர் எடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்கிறார். அவர் சொல்வதுபோல அவர் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை என்பது உண்மைதான். அந்த அனுபவம் எனக்கு தேவையும் படாது. ஏனெனில் அவருடைய கூவத்தூர் அனுபவத்தை ஒட்டுமொத்த தமிழகமும் நேரலையில் பார்த்தது. அவர் போல யார் காலிலும் விழுந்து நான் பதவி வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.