1. Home
  2. தமிழ்நாடு

இதை மட்டும் மத்திய அமைச்சர் நிரூபித்துவிட்டால் நான் எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயார் - ஆ.ராசா..!

Q

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது சுமார் 12 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. வக்பு மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் வக்பு மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.

முன்னதாக லோக்சபாவில் வக்பு மசோதா மீதான நேற்றைய விவாதத்தில் ஆ.ராசா எம்பி பேசியதாவது: வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் உள்ள முழுமையான உண்மைகளை மறைத்து மத்திய அமைச்சர் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

1970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984 வக்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தினர் கோரிக்கை படி இரண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 2013 ஆம் ஆண்டும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது எந்த பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?.

தமிழ்நாட்டில் இந்து அறநிலைய துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது.

ஒட்டுமொத்த வக்பு சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. வக்பு சொத்துக்கள் என அறிவிக்கப்பட்டதை அவை வக்ஃப் சொத்துக்கள் தானா என்று வரையறுக்கும் சட்டப்பிரிவு அபத்தமானது. இந்த சட்டப்பிரிவின் அதிகாரம் முழுவதும் அரசிடம் இருப்பது மிகவும் ஆபத்தானது.

வக்பு வாரிய திருத்த சட்டம் ஒட்டு மொத்த நாட்டின் விருப்பம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இதற்கு நேரெதிராக தமிழ்நாட்டில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அப்படியென்றால், அது ஒட்டுமொத்த நாட்டின் விருப்பம் அல்ல. இந்த வேற்றுமையை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அது தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானது. இவ்வாறு ஆ.ராசா எம்பி பேசினார்.

Trending News

Latest News

You May Like