1. Home
  2. தமிழ்நாடு

நான் என் அண்ணனை இழந்து நிற்கிறேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் கலங்கிய குஷ்பு..!

1

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

நடிகையும், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகியுமான குஷ்பூ, நேரில் சென்று, ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நம் மத்தியில் இப்போது இல்லை என்று சொல்ல மனசு வரவில்லை. அவர் நல்ல தலைவர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவருக்கு சுத்தமாக ஈகோ கிடையாது. எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்.

 

உலகமே தலைகீழாக நின்றாலும், இந்தக் கட்சிக்காக நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்று கூறுவார். அப்படி ஒரு விசுவாசம் அவரிடம் இருந்தது. நான் என் அண்ணனை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா, என் நண்பரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா அல்லது என்னுடைய குடும்பத்தின் மூத்தவரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா என்பது எனக்கு தெரியவில்லை.

அவர் எப்போதும் "உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம் இருக்கிறது. அது என்ன என்று சொல்ல தெரியவில்லை" என்று கூறுவார். எனக்கும் இன்று பார்க்கும்போது அப்படி தோன்றுகிறது. அவர் எப்போதும் நிச்சயமாக எங்கள் மனதில் இருப்பார். கட்சி ரீதியாக மட்டுமில்லாமல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரு நண்பரை இழந்துள்ளதாக உணர்வதாகச் சொல்கிறார்கள். அவர் போல இன்னொரு ஆள் நிச்சயமாக வரமுடியாது. என்னுடைய அரசியல் பயணம், அவர் இருக்கும்போது தான் தொடங்கியது. அவர் தான் என்னை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தார். நான் காங்கிரஸை விட்டு விலகியபோதும் கூட, அவரிடம் அதே அன்பு, அதே மரியாதை, அதே நட்பு தொடர்ந்தது.

அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. இதில் இருந்து எப்படி மீண்டு வருவேன் என்று தெரியவில்லை. அவரது நற்பன்பு பற்றி வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்குத் தான் அவருடைய மதிப்பு தெரியும். அவரது தைரியம், உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பது, மனதில் பட்டதை பேசுவது போன்ற தைரியம் வேறு எந்த தலைவருக்கும் வராது. இது எனக்கு மிக மிக தனிப்பட்ட இழப்பு" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
 

Trending News

Latest News

You May Like