‛ஜெ.ஜெயலிதா எனும் நான்..’அசைக்க முடியாத அரசியல் ஆளுமைக்கு சொந்தக்காரரான ஜெ., பிறந்த நாள் இன்று..!

அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனால், அரசியலுக்கு அறிமுகமான ஜெயலலிதா, தன் அசாத்திய பேச்சாற்றல், பன்மொழிப் புலமை, கம்பீர தோற்றம், துடுக்கான செயல்பாடுகள், சட்டென முடிவெடுக்கும் ஆற்றம் போன்றவற்றால், அ.தி.மு.க., தலைமைக்கு மிகவும் நெருக்கமானார்.
மிகக்குறுகிய காலத்தில், அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக பொறுப்பேற்ற ஜெ., தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். பார்லிமென்ட்டில், அவர்கள் ஆற்றிய கன்னிப் பேச்சு, அப்பாேதைய பிரதமர் இந்திரா காந்தியை மிகவும் கவர்ந்தது.
அப்போது, பார்லிமென்ட்டில், அவருக்கு, இருக்கை எண், 185ல் இடம் ஒதுக்கப்பட்டது. இதே இருக்கையில் தான், தமிழக முன்னாள் முதல்வரும், எம்.ஜி.ஆரின் அரசியல் குருவுமான சி.என்.அண்ணாதுரை அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சக எம்.பி.,க்கள் அனைவரும் ஜெலலிதாவின் கன்னிப் பேச்சை கேட்டு மிரண்டு போயினர். இவர், எதிர்காலத்தில், இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்வார் என, அப்போதே, மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., அவர்களின் மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அணியும் உருவானது. அப்போது நடந்த தேர்தலில், சேவல் சின்னத்தில் நின்று, ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
கட்சியை மீட்கும் போராட்டத்தில் ஜெ.,வுக்கே வெற்றி கிட்டியது. தன் அரசியல் குரு எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க., கட்சியையும் மீண்டும் தன் வசப்படுத்தினார்.
தமிழக சட்டசபையில், எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றினார். அதன் பின், 1991ல் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஜெ., முதல் முறையாக முதல்வரானார்.
தன் அரசியல் வாழ்வில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்த அவர், 2001, 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க.,வுக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தார்.
மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும், மிகப் பெரிய சக்தியாக இவர் விளங்கினார். மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாகவும் இவர் திகழ்ந்துள்ளார்.
மாநில கட்சித் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத பெருமையும், புகழும் தேசிய அரசியலில் ஜெலலிதாவிற்கு கிடைத்துள்ளது. தேசிய அரசியல் தலைவர்கள் பலருடன் நட்பு காட்டிய போதிலும், கூட்டணி, ஆதரவு என்று வரும் போது, அரசியல் வேறு, நட்பு வேறு என்பதில் தெளிவாக செயல்பட்டவர் ஜெ., என்றால் அது மிகையாகாது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் மோடி அலை வீசியபோது கூட, தமிழகத்தில் அதன் தாக்கமே இல்லாத வகையில், அ.தி.மு.க., மிக பிரமாண்டமான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழு காரணகர்த்தாவும், ஜெயலலிதா தான் என்று அடித்து சொல்லலாம்.
‛ஜெ.ஜெயலிதா எனும் நான்..’ என்ற சிம்மக் குரல் கர்ஜனையை கேட்பதற்கென்றே கோடிக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, பெண்கள், பொதுமக்கள் என பலரும் தவமாய் தவமிருந்தனர் என்றால் அது மிகையாகாது.
தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அரசியல் செய்வதில் சாணக்கியராக கருதப்பட்ட, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியலில் மாபெரும் வெற்றி கண்டவர் ஜெயலலிதா. 2011க்கு பின், 2016 வரை, தான் இறக்கும் வரை, தி.மு.க.,வை ஆட்சிக் கட்டிலில் ஏற விடாமல் பார்த்துக் கொண்டவர் ஜெயலலிதா.
அவரது மறைவுக்குப் பின் கூட, தற்போது ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள், இந்த அரசு, அம்மாவின் அரசு என்றுதான் கூறும் நிலை உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும், ஜெயலலிதா எனும் ஆளுமைக்காகத் தான் என்றே கூறலாம்.
அவர் மறைந்தும் கூட, இன்றளவும், அ.தி.மு.க., அனுதாபிகள், கட்சித் தொண்டர்கள், பெண்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்று, அவர் முதல்வர் பதவியேற்கும் போது, ‛ஜெ.ஜெயலலிதா எனும் நான்..’ எனக் கூறி, உறுதி மொழியெடுப்பார்.
அந்த சிம்மக் குரலை மீண்டும் கேட்க வாய்ப்பே இல்லை எனத் தெரிந்தும், ஜெயலலிதா என்ற பெயருக்காகவே, தங்கள் விலை மதிப்பற்ற வாக்குகளை, அந்த கட்சிக்கு அர்ப்பணிக்கின்றனர், அ.தி.மு.க., தொண்டர்கள். இது தான் அவர் செய்த மிகப் பெரிய சாதனைக்கு சான்று.
மொத்தத்தில், உயிருடன் இருந்த போதும் சரி, இறந்த பிறகும் சரி, இந்திய அரசியலில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாய் திகழ்கிறார், ஜெயலலிதா!