1. Home
  2. தமிழ்நாடு

நான் சென்னை வருகிறேன் என்றார்... ஆனால் உடல் மட்டும்தான் வந்தது - முரசொலி செல்வம் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

1

முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியரான முரசொலி செல்வம் அக்டோபர்10ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்தார். அமைச்சர் துரைமுருகன், இந்து என்.ராம், நடிகர் சத்தியராஜ், பேராசிரியர் நாகநாதன் உள்ளிட்டோர் முரசொலி செல்வம் குறித்த தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏன், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் சென்னை வருகிறேன் என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது.

முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அடுத்து, முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு பிறகு, என் மனம் உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறேன். காரணம், பள்ளிக்காலம் முதல், எனக்கு இயக்கப்பணிகளை கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம்.

மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டும் என எனக்கு பயிற்சி கொடுத்தவர் முரசொலி செல்வம். இவர் இன்று இல்லை என நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க முப்பெரும் விழாவின் போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.

திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாக கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு ஒன்றை தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களில் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் படும் என உறுதியளிக்கிறேன்” என்றார்.

Trending News

Latest News

You May Like