நான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் - கெஜ்ரிவால்... ஆனால் ஒரு கண்டிஷன்..!
டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜந்தா கி அதாலத் என்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இரட்டை இன்ஜின் அரசுகள் தோல்வியடைந்து வருகின்றன. இரட்டை இன்ஜின் என்பது இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழலாக மாறி விட்டது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் பணவீக்கம், மற்றும் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும் சாடினார் கெஜ்ரிவால்.
தொடர்ந்து டெல்லி குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ஜனநாயகம் இல்லை என்றும் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார. மேலும் மத்திய அரசுக்கு சவால் விட்டும் பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அதாவது, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்கி விட்டார் என்றால் நான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசுகள் விரைவில் கவிழும் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுவதாக குறிப்பிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பஸ் மார்ஷல்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் நீக்கம் மற்றும் டெல்லியில் வீட்டுக் காவலர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதையுத் மேற்கோள் காட்டி, பாஜக ஏழைகளுக்கு எதிரானது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.