1. Home
  2. தமிழ்நாடு

நான் ஜோசியர்தான்... என் வாக்கு பலிக்கும்.... 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி..!

1

சேலம் சித்தூரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இ.பி.எஸ்., பேசியதாவது:

‘‘எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி, எங்கள் கூட்டணியில் பிளவு என்பதே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தான் சொல்லிக் கொள்கிறார். நாங்களா சொன்னோம். எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல, தி.மு.க., கூட்டணியில் பிளவு இல்லை என்று ஸ்டாலின் தான் கூறி வருகிறார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள், தி.மு.க., அரசின் ஆட்சியை விமர்சிக்கிறார்கள். 41 மாத தி.மு.க., ஆட்சியை விமர்சிக்காத கூட்டணி கட்சிகள், தற்போது விமர்சிக்கிறார்கள் என்றால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தானே அர்த்தம். அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்.

அடிப்படை கட்டமைப்பு உள்ள கட்சி அ.தி.மு.க., தான். இளைஞர்களை கட்சியின் அதிகம் சேர்க்க நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும். ஜெயலலிதா இருக்கும் போது, 40 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

2021 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட லோக்சபா தேர்தலில் சற்று குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளோம். 2021ல் பெற்ற வாக்குகளை 2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற அனைவரும் உழைக்க வேண்டும். லோக் சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, தி.மு.க., கூட்டணி நம்மை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

41 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் தலைதூக்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக லஞ்சம் பெறப்படுகிறது. இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.

நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் அவர்களே ஜோதிடம் பலிக்கும். 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். தி.மு.க., என்றால் குடும்பம், குடும்பம் என்றால் தி.மு.க.,தான். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதி, கனிமொழி, சபரீசன், ஸ்டாலினின் மனைவி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்.

தி.மு.க.,வின் மூலம் மீண்டும் மன்னராட்சி வருகிறது. கருணாநிதி மன்னராக இருந்த போது ஸ்டாலின் இளவரசராக இருந்தார். தற்போது, ஸ்டாலின் மன்னராக இருக்கும் போது, உதயநிதி இளவரசராகியுள்ளார். அவருக்கு முடிசூட ஸ்டாலின் துடிக்கிறார். அ.தி.மு.க., இருக்கும் வரை உங்களின் பாச்சா பலிக்காது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டசபை தேர்தல் இருக்கும்.

எப்போது பார்த்தாலும் நான் மிசாவில் சிறைக்கு சென்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆங்காங்கே கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், ஸ்டாலின் சிறையில் இருப்பது போன்ற போட்டோக்கள் இருந்தன. நீங்கள் மட்டும் தான் மிசாவில் சிறைக்கு சென்றீர்களா? எத்தனையோ தி.மு.க., தலைவர்கள் சிறைக்கு சென்ற போதும், அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லையே. அவர்கள் எல்லாம் தி.மு.க.,வுக்கு உழைக்கவில்லை. அவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கல. அதனால் வாய்ப்பு கிடைக்கல. உதயநிதி கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அந்தஸ்து இருக்கிறது. இதன் காரணமாக துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like