வானில் வட்டமடித்த ஹைதராபாத் விமானம்.. வந்த வழியே திரும்பி சென்றது!
சென்னை விமான நிலையப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக காலை முதல் இருந்து விமான சேவைகள் தாமதமாக இயக்கப்படுவது மட்டும் அல்லாமல், தரை இறங்குவதிலும் சிக்களை எதிர்கொண்டு வந்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மூன்று புறப்பாடு விமானங்கள் மற்றும் மூன்று வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் 72 பயணிகளுடன் இன்று பகல் 11.30 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது. அந்த நேரத்தில் சென்னை விமான நிலைய பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தது. மேலும் மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக சில மணி நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்த விமானம் மீண்டும் ஹைதராபாத்துக்கே திருப்பி சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிகுள்ளகினர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் ஆலந்தூர்,மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டுக் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஜிஎஸ்டி சாலை,தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மேலும் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.