கணவர்களே கவனம்.. மனைவியின் அனுமதியின்றி இதை செய்யாதீங்க..!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கோரி 2019ல் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையின் போது, தன் மனைவி பேசிய தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து உள்ளதாகவும், அதனை தன் தரப்பு சாட்சியாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கணவர் கோரினார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணையின் போது மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த உரையாடல் மனைவிக்கு தெரியாமல் பதிவாகி உள்ளது. எப்போது பதிவு செய்யப்பட்டது என தெரியாது. எனவே அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய இயலாது’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை கடந்த மாதம் ரத்து செய்தது.
அதற்கான உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மனைவியின் தொலைபேசி உரையாடலை ரகசியமாக பதிவு செய்வது அவரது தனியுரிமையை மீறும் செயலாகும். தம்பதியர் இடையே உரையாடல் நடந்த சூழ்நிலை அதை பதிவு செய்த கணவர் எவ்வாறு பதில் அளித்தார் என்பதை உறுதிப்படுத்த முடியாது.
ஏனெனில் இந்த உரையாடல் ரகசியமாக பதிவு செய்யப்பட்டது என தெளிவாகிறது. மனைவியின் பேச்சை பதிவு செய்யும் நோக்கில் தேவையற்ற கருத்துக்களை கணவர் தெரிவித்து இருக்கலாம். எனவே, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.