பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவர்.. அதிர்ச்சியில் மக்கள் !

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பாலாபுரம் பகுதியில் தமிழ்மணி (40)- மங்களா (37) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் தந்தையிடமும், மற்றொரு மகன் தாயிடமும் வளர்ந்து வருகின்றனர்.
கணவரை பிரிந்த மங்களா அய்யனேரி கிராமத்தில் தையல் கடை வைத்து தனது மகனை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்மணி தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நேற்று காலை அய்யனேரி கிராமத்திற்கு சென்ற தமிழ்மணி, விவாகரத்து பத்திரத்தில் மனைவியிடம் கையெழுத்து கேட்டுள்ளார். அதற்கு மங்களா சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி மங்களாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். தகவல் கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர் மங்களாவை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மங்களா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தமிழ்மணியை கைது செய்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பட்டப்பகலில் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in