கொள்ளி வைக்க ஆண் பிள்ளை இல்லையே என திட்டிய கணவன் – தற்கொலை செய்து கொண்ட மனைவி

இந்த நவீன யுகத்திலும் ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்ற எண்ணம் மக்களிடையே வலுவாக உள்ளது. அதிலும் குறிப்பாக இறந்தவுடன் கொள்ளி வைக்க கண்டிப்பாக ஆண் பிள்ளை வேண்டும் இல்லை என்றால் தனக்கு சொர்க்கம் கிடைக்காது என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண் தான். ஆண் குழந்தைக்காக அவளை வார்த்தைகளால் வறுத்தெடுத்து விடுகிறார்கள். இறுதியில் அந்தப் பெண்ணின் நிலை மிகவும் பரிதாபமாகி விடுகிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது. அங்குள்ள சிங்கட் சாலையில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு 12 வயது மற்றும் 9 வயது என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அந்த கணவனுக்கு ஆண் குழந்தை மீது உள்ள மோகத்தால், தனக்கு கொள்ளி வைக்க ஒரு ஆண் குழந்தை வேண்டும் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.
தனக்கு ஆண் குழந்தையிருந்தால் தான் உறவினர்கள் தன்னை மதிப்பாக நடத்துவார்கள் என்ற தவறான புரிதலும் அவரிடம் இருந்ததால், அவரது மனைவியை ஆண் குழந்தையை பெற்றுத்தர வக்கில்லை என்று திட்டியபடி இருந்துள்ளார். ஆண் குழந்தை இல்லாத காரணத்தால், அந்தப் பெண்ணை அந்தப் பெண்ணின் கணவன் மட்டுமல்லாமல், மாமியார் உள்ளிட்ட பிற உறவுகளும், ஆண் குழந்தை பெற வக்கில்லாதவள் என்று கண்ட வார்த்தைகளால் அந்தப் பெண்ணை குதறி மனத்தைக் காயப்படுத்தியுள்ளார்கள்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண், தனது சகோதரரிடம் இந்த விஷயம் பற்றிக் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். மறுநாள், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் சகோதரர், தன் சகோதரியின் கணவன் வீட்டார் மீது புகார் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆண் குழந்தை ஆசையுள்ள அந்த கணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.