சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களுடன் பழக்கம்..18 வயது மனைவியைக் கொன்ற கணவன்!!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த தவிடன் மகள் ஜெயசக்திபாலா (18). இவருக்கும் விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் மத்தியசேணையைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டிக்கும் (20), பத்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 3 மாதமாக ஜெயசக்திபாலா, பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி வி.அம்மாபட்டி பகுதி கண்மாயில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதையடுத்து வழக்கு தொடர்பாக கணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், ஜெயசக்திபாலா பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, ஜெயசக்திபாலா பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
முத்துப்பாண்டி பலமுறை மனைவியை அழைத்தும் அவர் போகவில்லை என கூறப்படுகிறது. வி.அம்மாபட்டியில் உள்ள உறவினர்கள், தம்பதியிடம் சமாதானமாக பேசி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க திட்டமிட்டனர். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த முத்துப்பாண்டி, காரியாபட்டி கல்குறிச்சியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து இரவு 9 மணியளவில் அம்மாபட்டி மெயின்ரோட்டில் நின்று கொண்டு ஜெயசக்திபாலவை நண்பர்கள் போனில் அழைத்துள்ளார். வீட்டிலிருந்து வந்த அவரை கண்மாய்க்குள் அழைத்துச் சென்ற கணவன் உட்பட 3 பேர் ஜெயசக்திபாலாவை குத்திக் கொலை செய்துள்ளனர்.