புது தம்பதிகள் இடையே சண்டை : மனைவியை கொன்று போலீஸில் சரண் அடைய சென்ற கணவன் விபத்தில் பலி..!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தின் அதிலாபாத்தை அருகே உள்ள பங்கர்குடா பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவருக்கும் ஆர்மூர் பகுதியை சேர்ந்த தீபா (22) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது. திருமணம் முடிந்து இருவரும் அருண் வீட்டில் வசித்து வந்த நிலையில், வழக்கமாக நடக்கும் தம்பதி சண்டை நடந்துள்ளது.
அந்த சமயத்தில் அருணுக்கு அவரது மனைவி தீபா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தன்னை விட்டு வேறு ஒருவரை காதலிப்பாரோ என்று தீபா மீது ஏற்பட்ட சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்தது. இதனால் மேலும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தீபா மனதளவிலும் உடலளவிலும் மிகவும் காயமுற்றிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தீபா தனது பெற்றோருக்கு தெரிவித்து அழுதபோது எல்லாம், அவர்கள் தீபாவை சமாதான படுத்தி வந்துள்ளனர். இதனால் அருண் மேலும் தீபாவை சித்திரவதை செய்து வந்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற தீபாவை 1 வாரத்திற்கு பிறகு அருணின் தாயார் சென்று சமாதான படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
எனினும் அருண் மீண்டும் தனது மனைவி தீபாவை கொடுமை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு நேரத்தில் இதுகுறித்து கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அருண், தனது மனைவி தீபாவை அடித்து தாக்கியுள்ளார். இதில் சுவற்றில் மோதி தீபா மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.
கோபம் அடங்காத அருண், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தீபாவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரும் முன்பே, தனது மனைவியை கொன்றதற்காக போலீசில் சரணடைய பைக்கில் சென்றார். அப்போது வேகமாக சென்ற அவர் எதிரே வந்த லாரி ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அருண், மனைவி தீபா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கொலை செய்து போலீசில் சரணடைய சென்றபோது விபத்தில் சிக்கி கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.