1. Home
  2. தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற கணவன், மனைவி கைது..!

Q

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் பிட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (45) மற்றும் அவரது மனைவி ஹனீஷா (40) ஆகிய இருவரும் இலங்கை செல்வதற்கு வந்தனர். விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இருவரின் பாஸ்போர்ட்கள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஆனால் இருவரும் இலங்கை தமிழர்கள் போல் பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் இலங்கையை பூர்வீகமாக சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கு ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் இருப்பதாகவும், அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகவும் கூறினார்கள். ஆனால் குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. போலியான ஆவணங்கள் தயாரித்து, ஏஜென்ட்களுக்கு பணம் கொடுத்து, இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து போலி இந்திய பாஸ்போர்ட் வாங்கி வைத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

மேலும் இருவரின் பயணத்தையும் ரத்து செய்து, அவர்களை விமான நிலைய குடியுரிமை அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கியூ பிராஞ்ச் அதிகாரிகள், மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் நீண்ட நேர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குடியுரிமை அதிகாரிகள் கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போலி ஆவணங்கள் மூலம் போலியான இந்திய பாஸ்போர்ட் வாங்கி, அதன் மூலம் இலங்கைக்கு பயணம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துக் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like