2 ஆண்டுகளில் அமோக வெற்றி..! ஊழியர்களுக்கு கார் பைக் என இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!
உலகெங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்த பல்வேறு சலுகைகளை வழங்கும். ஆனால், அது பெரும்பாலும் ஓரிரு ஆயிரம் மதிப்பிலான வவுச்சர்களாக மட்டுமே இருக்கும்.
ஆனால், சில நிறுவனங்களை அதைத் தாண்டி சிறப்பாக வேலை செய்யும் ஊழியர்களை ஊக்குவிக்கப் பல சலுகைகளை வாரி வழங்குவார்கள். அப்படிதான் சென்னை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கார்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றை அள்ளி கொடுத்துள்ளது. சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரும் தனியார் லாஜிஸ்டிக் நிறுவனம் தான் இப்படி தனது ஊழியர்களுக்குப் பரிசுகளை வாரி வழங்கியுள்ளது.
சென்னை, சேத்துபட்டுவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 14 பணியாளர்களுக்கு honda ஸ்கூட்டி வகை இருசக்கர வாகனத்தையும், 2 பணியாளர்களுக்கு Royal Enfield 350 bullet வகை இருசக்கர வாகனம் மற்றும் ஒரு பணியாளருக்கு கார் என மொத்தம் சுமார் 25 லட்சம் மதிப்பிலான வாகனங்களை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டென்சில் ராயன் பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, டென்சில் ராயன், கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார் பைக்குகள் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளோம். நான் ஒரு நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றிய போது எனக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தது. அதில், பல நிறைவேறவில்லை. அத்தகைய எதிர்ப்பார்ப்புகள் எங்கள் பணியாளர்களுக்கு இருக்காமல் இருக்க அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உள்ளோம். மொத்தம் 25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பரிசுகளைப் பெற்ற பணியாளர்கள் அளித்த பேட்டியில், எங்கள் நிர்வாக இயக்குநருக்கு நன்றி. இத்தகைய பரிசை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தற்போது வாங்கும் ஊதியத்திற்கும், எங்களுக்கு இருக்கும் கடமைகளுக்கும் ஒரு பைக்கோ, காரோ வாங்குவதற்கு காலதாமதம் ஆகும். ஆனால், எங்கள் நிர்வாக இயக்குநர் எங்களுக்கு இந்த பரிசை அளித்துள்ளார். இந்தப் பரிசு எங்கள் தினசரி பயணத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். மற்ற நிறுவனங்களில் இத்தகைய அங்கீகாரம் கிடைக்குமா எனத் தெரிவியவில்லை. ஆனால் எங்கள் நிறுவனத்தில் எதிர்பாராமல் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தனர்.