1. Home
  2. தமிழ்நாடு

பேரிழப்பு..! எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்.!

1

தமிழ் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான பேரா.ராஜ் கௌதமன் இன்று (13 நவம்பர் 2024) காலை காலமானார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை தனது எழுத்து மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர். ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர்.

பழங்காலத்திலிருந்து தற்காலம் வரையிலான தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யும் இருபது ஆய்வுப் படைப்புகளை அவர் எழுதியுள்ளார். தற்பொழுது, அவரது மறைவிற்கு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“ஒரு தலைசிறந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு” என கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


 

தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே  நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். 

புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார். 

படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like