காதல் தோல்வியுடன் நீட் தற்கொலைகளை ஒப்பிட்ட ஹெச்.ராஜா!

தமிழகத்தில் நேற்று (செப்.12) ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ ஆகியோர் ஏற்கனவே கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாமல் போன நிலையில், இந்தாண்டு நீட் தேர்வில் இந்தாண்டும் தோல்வியடைந்து விடுவோமா என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்யும்படி திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரிவிணைவாத சக்திகள் தான் மாணவர்களைப் பயமுறுத்தி வருவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எதிர்கட்சிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, 'தமிழகத்தில் பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து நீட் தேர்வு குறித்து மாணவர்களை பயமுறுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
மாணவர்கள் தற்கொலை செய்வதால் நீட் தேர்வை ரத்து செய்யும்படி கூறுகின்றனர். பிளஸ் 2 தேர்விலும் கூட தான் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய முடியுமா. காதல் தோல்வியாலும் கூட சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காக காதலுக்கு தடை சட்டம் போட முடியுமா' இவ்வாறு ஹெச். ராஜா கூறியுள்ளார்.