1. Home
  2. தமிழ்நாடு

48 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்ட பார் உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? அன்புமணி கேள்வி

1

தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் அரசு உரிமம் பெற்று பார்கள் இயங்கி வந்தன. ஆனால் அவற்றில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் (Ratta Somersett, Taj Club House, VVA Hotels (Radisson Blu), Hyatt Regency, The Park) ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் பார் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இந்நிலையில் அந்த பார்கள் மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம் செய்யும் தமிழக அரசு, நட்சத்திர விடுதிகளுக்கு குடிப்பக உரிமம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு வேகமும், ஆர்வமும் காட்டியது மர்மமாக உள்ளது.

சென்னையிலுள்ள தனியார் 5 நட்சத்திர விடுதிகளில் அமைந்துள்ள குடிப்பகங்களில், அந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சர்ச்சைக்குரிய விடுதிகளில் வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவற்றின் குடிப்பக உரிமங்கள் கடந்த சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை சரியானது தான்.

ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? குடிப்பகங்களில் எந்த விதிமீறலும் நடக்கவில்லையா? அல்லது மது வணிகம் என்பது ’தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி’ என்பதால் நட்சத்திர விடுதிகளின் குடிப்பகங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும்.

ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமின்றி, சென்னையிலும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ’’கிளப்”களிலும் உறுப்பினர் அல்லாதவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு மது வழங்கப்படுகிறது. இதுவும் விதிமீறல் தான். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும் கூட மது வணிகத்தில் எந்த விதிமீறலையும் அனுமதிக்கக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் மது வணிகத்தில் விதிகளை மீறும் அனைத்து கிளப்கள் மற்றும் விடுதிகளின் குடிப்பக உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like