மிகவும் சுவையான மற்றும் தரமான மக்ரூன் செய்வது எப்படி?
தமிழகத்தில் பல இனிப்பு வகைகள் எண்ணற்ற வடிவம் மற்றும் வண்ணத்தில் இருக்கும். ஆனால் தூத்துக்குடி மக்ரூன் கூம்பு வடிவத்தில் வெள்ளையாக இருக்கும், ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் மக்ரூன் பல வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த மக்ரூன் வாயில் போட்டதும் கரைந்துவிடும். இப்படிபட்ட தூத்துக்குடி மக்ரூனின் சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் எவரும் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
போர்ச்சிகீசியர்கள் கடல் வணிகத்துக்கு வசதியாகக் தூத்துக்குடி பகுதியில் குடியேறி வாழத் தொடங்கிய போது, அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் சமையல் நுணுக்கங்களையும் நம் கடலோர மண்ணுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். அப்படி கிடைத்தது தான் இந்த மக்ரூன். மக்ரூன் என்ற போர்த்துக்கீசிய சொல்லுக்கு முந்திரியும், முட்டையும் கலந்த இனிப்பு என்று பொருள். தூத்துக்குடியை ஆண்டு வந்த போர்ச்சுகிசியர்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கேரளாவின் கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து ‘மக்ரூன்' செய்து சாப்பிட்டார்கள்.
முந்திரிக்கொட்டை கொல்லம் வழியாக வந்ததால் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொல்லாக்கொட்டை என்று அழைக்கிறார்கள். தூத்துக்குடி மக்ரூனும் முட்டையும் முந்திரியும் சர்க்கரையும் கலந்த கலவை என்பதால், மக்ரூன் ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படிபட்ட மக்ரூன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மக்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளில் ஒன்றாக திகழ்கிறது.
இதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்...
1 கிலோ மக்ரூன் செய்ய அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல் 15 கோழி முட்டைகள் தேவைபடுகிறது. முந்திரியையும் சர்க்கரையையும் நன்கு அரைத்துத்தூளாக்கிய பின்னர் முட்டையின் வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக கலக்கவேண்டும். இதற்க்கு கிரைண்டர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இயந்திரத்தில் போட்டு அடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை ததும்புகிறது. பின்னர் சர்க்கரையை கொட்டி, திரும்பவும் அடிக்கிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள். மக்ரூனுக்கு வடிவம் கொண்டுவருவதுதான் முக்கியம். ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்கொண்டு அதற்குள் மாவை அள்ளிவைத்து கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட சுருள் வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு. வடிவம் கிடைத்ததும் சூளை அடுப்பின் மேல்தளத்தில் மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்" தயாராகிவிடுகிறது.
இப்படிபட்ட மக்ரூன் கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கு சில முகவர்கள் இங்கிருந்து மக்ரூனை விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இங்குள்ள சில குறிப்பிட்ட பேக்கரிகள் மட்டுமே மக்ரூன் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றவையாக உள்ளன.
இந்நிலையில் மக்ரூனை சாதாரண மக்களும் ருசிக்கும் வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் வண்ணம் நிலக்கடலை மக்ரூன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் முந்திரி பருப்பு மூலம் தயாரிக்கப்படும் மக்ரூன் விலை அதிகம் என்பதால் அதே சுவையில் நிலக்கடலை மக்ரூனை அறிமுகம் செய்திருக்கிறார்கள். மக்ரூனை பொருத்தவரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின் போது தான் அதிகம் விற்பனையாகும்.
மேலும், திருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு தாம்பூலப் பைகளில் போட்டுக் கொடுக்க பலர் மக்ரூனை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் மக்ரூனை விரும்பி வாங்குவார்கள். இப்படி பல சிறப்புகளை உடைய மக்ரூன், இன்றளவிலும் தூத்துக்குடிக்கு சென்றுவரும் பிற மாவட்ட மக்கள், வாங்குச் செல்லும் பொருட்களில் மக்ரூன் கட்டாயம் இடம்பிடிக்கிறது. இப்படி மக்களை கவரும் பல வகை மக்ரூன்கள் தூத்துக்குடியில் இருந்துதான் உலகம் முழுவதும் மக்ரூன் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.