1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு இலவச வீடு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

1

தமிழகத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் இன்றைக்கும் ஏராளமான குடும்பங்கள் குடிசை, கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் தான் வசித்து வருகின்றனர். கிராமப்புற மக்களின் இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு 03.06.2011 அன்று 'முதலமைச்சரின் சூரிய மின்சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டம்' (Chief Ministers Solar Powered Green House Scheme) என்ற ஒரு உன்னதமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு இலவசமாக கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற இலவச வீட்டு வசதி திட்டம் வேறு எந்தவொரு மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை என்பதே இந்த திட்டத்தின் சிறப்பாகும்.

மேலும், இத்தகைய பசுமை வீடுகளை கட்டித்தருவதன் மூலம் புதுப்பிக்க கூடிய மின்சக்தியின் நன்மைகளை நன்றாக தெரிந்துக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், மின்சாரத்தையே பயன்படுத்தி பழக்கம் உள்ள நிறைய பேருக்கு புதுப்பிக்கக் கூடிய சூரிய மின்சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கும்.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் சிறப்பம்சங்கள்


இந்த திட்டம் முழுக்க முழுக்க கிராமப் புற ஏழை குடும்பங்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 சதுர அடி பரப்பளவில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித் தரப்படுகிறது. திட்டத்தின் ஆரம்பத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு கட்டுமான தொகையாக ரூ.1.80 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த தொகையானது 2020 ஆம் ஆண்டு தான் ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏற்கனவே உள்ள கூரை அல்லது ஓட்டு வீட்டிற்கு பதிலாகவும் இந்த திட்டத்தின் மூலம் புதிய வீடு கட்டித்தரப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகள் (CFL), படுக்கை அறை, லிவ்விங்க் ரூம், கழிப்பறை, வராண்டா, மற்றும் சமையலறை போன்றவை இடம்பெற்றிருக்கும். தேவைப்பட்டால், சூரிய மின்சக்தி பதிலாக மின்சார இணைப்பையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

வீடு கட்டுவதற்கு தேவையான 350 கிலோ கம்பிகள், 150 மூட்டை சிமெண்ட், கதவு, ஜன்னல்கள், மணல் ஆகியவை ஊரக வளர்ச்சி துறை மூலம் வழங்கப்படும். அதேப்போல், 5 5 சூரிய சக்தியால் இயங்கும் காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகள் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மூலமே வழங்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பதாரருக்கு சொந்தமாக உள்ள பட்டா நிலத்தில் மட்டுமே பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் எந்தவொரு நிலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட மாட்டாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முதலமைச்சரின் இலவச வீடு திட்டத்திற்கான தகுதிகள் என்னென்ன?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் மூலம் பலனைப் பெற விண்ணப்பதாரர் பின்வரும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, இந்த திட்டத்தின் பலனைப் பெற வேண்டுமென்றால், 300 சதுர அடிக்கும் குறையாத பரப்பளவு கொண்ட நிலத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த நிலத்தின் பட்டாவானது குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரிலோ இருக்க வேண்டியது மிக அவசியம்.

அந்த பத்திரத்தில் எந்தவொரு வில்லங்கமும் இருக்க கூடாது. ஒருவேளை வில்லங்கம் இருந்தால் அதை சரிசெய்த பிறகு திட்டத்திற்கு அப்ளை செய்யுங்கள். அதேபோல், கிராம பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். நீங்கள் வசிக்கும் கிராமத்திலேயோ அல்லது வேறு எந்த இடத்திலும் சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக, மாநில அல்லது மத்திய அரசின் வேறு எந்தவொரு வீட்டுவசதித் திட்டத்தின் கீழும் பயனடைந்து இருக்கக் கூடாது.

அதாவது, நாட்டில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் தவிர கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என இரண்டு வகையான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு விண்ணப்பித்து இருந்தால், பசுமை வீடு திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கும் போது விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஓய்வுபெற்ற துணை ராணுவப் படை உறுப்பினர், திருநங்கைகள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்கள், எய்ட்ஸ் அல்லது காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேலும், மொத்த ஒதுக்கீட்டில் 29 சதவீதம் எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்களுக்கும், 1 சதவீதம் எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் மற்ற வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோல், மொத்த ஒதுக்கீட்டில் மாவட்டம் வாரியாக 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. மேலும், கிராம பஞ்சாயத்தில் வாழும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பத்தின் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன?

  • ரேஷன் கார்டு
  • ஆதார் அட்டை
  • நிலத்தின் பட்டா
  • வங்கி கணக்கு புத்தகம்

தமிழ்நாடு இலவச வீடு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்குள்ள, அதிகாரிகளிடம் இத்திட்டம் குறித்து கூறினால் அவர்கள் படிவம் ஒன்றை கொடுப்பார்கள். அதை வாங்கி, பிழையில்லமால் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பித்து விட வேண்டும்.

அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பம், தகுதி, வீடு கட்ட தேவையான இடத்தின் நில உரிமை மற்றும் அளவு ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்வார்கள். அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், உங்களுடைய விண்ணப்பத்தை அதை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்வார்கள். விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டுவதற்கான ஆர்டர் காபியை வழங்குவார்கள்.

பசுமை வீடு திட்டத்திற்கான நிபந்தனைகள்

இத்திட்டத்தின் மூலம் வீடு கட்டும்போது சில நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, வீடு 300 சதுர அடி பரப்பளவில் மட்டுமே கட்டப்படும். ஆனால், வீட்டின் சமையலறை, கழிப்பறை மற்றும் படுக்கை அறையை உங்களுக்கு வேண்டிய திசையில் மாற்றி வைத்துக்கொள்ளலாம். திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகியவை வீட்டின் முன்புறத்தில் வரையப்படும். வீட்டில் அமைக்கப்படும் பீங்கான் டைல்ஸ்களில் திட்டத்தின் சின்னம் அச்சிடப்படும்.

Trending News

Latest News

You May Like