தமிழக அரசு கொடுக்கும் ரூ.1 கோடி தொழில் கடன் - விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கிடும் பொருட்டு அடையாளமாக 15 முன்னாள் படைவீரர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு, தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், பயனடைவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுவதால் கடன் சுமை குறையும்.
இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிளான தேர்வு பணிக்குழு (District level Task Force Committee) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல் (Provisional Sanction) ஆணை வழங்கப்படும்.
தொழில் தொடங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப்புதல் பெற்றவர்களுக்கு (Provisional Sanction) அரசு செலவில் சென்னை- தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு (Final Sanction of Loan) அளிக்கப்படும். வருங்காலங்களில் தமிழ்நாடு அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
.png)