1. Home
  2. தமிழ்நாடு

சிறைகளுக்குள் மொபைல் போன், கஞ்சா எப்படி செல்கிறது?: ஐகோர்ட் கேள்வி..!

Q

கொலை வழக்கில் கைதான பிலால் மாலிக், 35, சையது முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில், 48 மற்றும் யோகேஷ், 40, ஆகியோர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ், பன்னா இஸ்மாயிலின் மனைவி சமீம்பானு, யோகேஷின் சகோதரர் பிரகாஷ் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்:

சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதில், மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்களுக்கு உரிய சிகிச்சை, இதுவரை வழங்கப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, உரிய சிகிச்சை அளிக்க கோரிய மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.

கடுமையாக தாக்கிய சிறை ஜெயிலர், துணை ஜெயிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறியுள்ளனர்.

இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜராகி, ''சிறை அதிகாரிகள் சோதனையில், கைதிகளிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால், கைதிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்களுக்கு இதுவரை முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை,'' என, குற்றஞ்சாட்டினார்.

இதை மறுத்த அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், ''திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகள் தான் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தங்களை பாதுகாத்து கொள்ளவே அதிகாரிகள் முயன்றனர்,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கைதிகள், சிறை அதிகாரிகள் இடையே நடந்த இச்சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் உண்மைகளை கண்டறிய விரும்புகிறது.

இந்த வழக்கில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் எதிர்மனுதாரராக இணைக்கப்படுகிறார். அவர், மருத்துவ குழுவை நியமித்து, கைதிகள் மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கைதிகளை முழுமையாக ஆய்வு செய்து, மருத்துவர்கள் குழு, வரும், 21ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்.

மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைகளிலும், 'ஸ்கேனர்' உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், சிறைகளுக்குள் மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன; பாதுகாப்பு மீறல் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., உள்ளிட்டோர் ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Trending News

Latest News

You May Like