1. Home
  2. தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை இப்போ எப்படி இருக்கு..?

1

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை யானை உள்ளது. இந்த யானைக்கு மொத்தம் மூன்று பாகன்கள் உள்ளனர். இதில், திருச்செந்தூர் வ.உ.சி தெருவை சேர்ந்த உதயகுமார் உதவி பாகனாக இருந்து பராமரித்து வந்தார். கடந்த 18ம் தேதி பாகன் உதயகுமார் பணியில் இருக்கும்போது அவரைப் பார்ப்பதற்காக உறவினர் சிசுபாலன் யானை கட்டும் இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, யானை முன்பு நின்று செல்பி எடுத்து இருக்கிறார். மேலும் யானையை தனது கையால் தட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த யானை துதிக்கையால் சிசுபாலனை பிடித்து சுவரில் வீசியது. அவரை காப்பாற்றச் சென்ற பாகன் உதயகுமாரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் இருவரும் முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சாந்தமான சுபாவம் கொண்ட பெண் யானையான தெய்வானை, பாகனை தாக்கியது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யானையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, தன்னுடன் பாசமாக பழகி வந்த பாகன் உதயகுமார் இறந்த சம்பவத்தையடுத்து யானை இரண்டு நாட்களாக சோகமாக காணப்பட்டது. யானை பாகன் இறந்து கிடந்த இடத்தையே அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தது. காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்து இருந்தது. யானை தெய்வானை தொடர்ந்து 5 நாட்கள் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளது.

அவர்கள் யானையின் நடவடிக்கை, செயல்பாடுகளை அறிந்த பின்னர், அதுதொடர்பான முழு விவரத்தையும் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர். யானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு இடையே பாகனை தாக்கிய தெய்வானை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

தற்போது இயல்பு நிலையில் உள்ள யானையை குளிப்பாட்டி, உணவும் கொடுத்து வருகின்றனர். தினமும் யானையை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னர் தற்போது வரை யானை கட்டப்பட்டுள்ள இடத்தை விட்டு வெளியே கொண்டு வராமல் உள்ளது. இன்று யானையை குளிப்பாட்டி அதற்கு பிடித்தமான உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர் பாகன், யானையிடம் சோறு சாப்டியா ? தண்ணி குடிச்சியா? எனக் கேட்டதற்கு தெய்வானை யானை, தலையை ஆட்டி ஆம் என சொல்வது போல சைகை செய்தது. பாகனை தாக்கிய சம்பவத்திற்கு பிறகு சோகமாக காட்சியளித்த தெய்வானை யானை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவது பக்தர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like