எப்ஐஆர் லீக் ஆனது எப்படி? காவல் ஆணையர் பேட்டி..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான எப்ஐஆர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வழக்கில் எப்ஐஆர் லீக் செய்தவர்கள் யார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என காவல்துறைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனா்.
மேலும் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் காவல் துறைக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில் காவல் ஆணையர் அருண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது" பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவல் அடிப்படையில் தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. போலீசார் யாரும் அதனை திருத்தி எழுதி இருக்கலாம்.
பழைய எப்ஐஆர் முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன் அந்த தகவல்கள் லாக் செய்யப்படும். ஆனால் தற்போது பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் தகவல்கள் இணையத்தில் பதிவேற்றியபோது, தொழில்நுட்ப காரணமாக லாக் ஆகாமல் இருந்து இருக்கலாம். அப்போது சிலர் கசிந்து இருக்கலாம். மேலும் புகார் கொடுத்தவரிடம் எப்ஐஆர் காபி ஒன்று கொடுக்கப்படும். அதில் இருந்த தகவலும் வெளியாகி இருக்கலாம்.
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 2013 முதல் தற்போது வரை 20 வழக்குகள் உள்ளன. திருட்டு, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் மட்டும் தான் உள்ளன. ரவுடித்தனம், பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்ற வழக்குள் ஏதும் இல்லை. சம்பவத்தன்று மாணவியை மிரட்டும்போது ஞானசேகரன் தனது செல்போனை பிளைட் மோடில் போட்டு உள்ளார். அப்போது அவர் மிரட்டுவதற்காக சார் என்ற வார்த்தையை குறிப்பிட்டு உள்ளார்.
எனவே இந்த வழக்கில் சார் என்று மர்மநபர் ஒருவரை குறிப்பிடுவது உண்மை கிடையாது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 70 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அவற்றில் 56 கேமராக்கள் செயல்படுகின்றன. மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் சிப்ட் முறையில் பாதுகாப்பு காவலர்கள் பணியில் உள்ளனா். எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். " என ஆணையர் அருண் கூறி உள்ளார்.