ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?… சேலம் சரக டி.ஐ.ஜி உமா விளக்கம்..!
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்த ஹரியானா கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியில் ஹரியானாவுக்கு தப்பிச்செல்ல முயன்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்களை தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். இதில் ஒரு கொள்ளையன் கொல்லப்பட்ட நிலையில், மற்ற 6 பேரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியை சேலம் சரக டி.ஐ.ஜி உமா, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி உமா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, திருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிப்பதே இவர்கள் பணி என்றும் தெரிவித்தார். 7 பேரும் 3 குழுக்களாக பிரிந்து தனித்தனியே கேரளாவுக்கு வந்த நிலையில், திருச்சூரில் அனைவரும் சந்தித்து கூகுள் மேப்பில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-கள் உள்ள இடங்களை கண்டறிந்து காரில் சென்று கொள்ளையடித்தாக குறிப்பிட்டார். மேலும், ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் இயந்திரம் மூலம் அறுத்து பணத்தை கொள்ளையடித்ததாகவும் டிஐஜி உமா தெரிவித்தார்.
கேரளாவில் லோடு இறக்கிவிட்டு ஹரியானாவுக்கு செல்லும் கண்டெய்னர் லாரியில், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பின்னர் அவர்கள் காருடன் ஏறி கொள்வதாகவும், இதனால் கொள்ளையில் தொடர்புடைய காரை நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். நாமக்கல் காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது அசாருதீன் என்பவர் பணப்பையுடன் தப்பியோடியதாகவும், அவருடன் ஒடிய ஜூமான் என்பவரை கால்வதுறையினர் பிடிக்க முயன்றபோது தாக்கியதால், போலிசார் சுட்டதில் அவர் பலியாகினார். மேலும் அசாருதீனை காலில் சுட்டுப்பிடித்ததாகவும் டிஐஜி உமா தெரிவித்தார்
.
கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் ஹரியானா கொள்ளையர்கள் ஏற்கனவே கைதாகியுள்ளதாகவும், இவர்களுக்கு அவர்களுடன் தொடர்பு உள்ளதா என கிருஷ்ணகிரி காவல்துறையினர் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, அரியானா கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த கேரள மாநில போலிசார் நாமக்கல் வந்தடைநதனர். இதனையொட்டி காவல் நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.