முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்தது எப்படி ? வெளியான மருத்துவ அறிக்கை..!
92 வயதாகும் மன்மோகன் சிங் சில மணி நேரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் முகாமிட தொடங்கிய நிலையில், மன்மோகன் சிங்கின் இறப்பை காங்கிரஸ் வட்டாரத்தினரும் உறுதி செய்திருக்கின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,'ஆழ்ந்த சோகத்துடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை தெரியப்படுத்திக் கொள்கிறோம். வயோதிகத்தால் ஏற்படும் அசௌகரியங்களுக்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், இன்று அவரது இல்லத்தில் இருந்த போது திடீரென சுயநினைவை இழந்தார். அப்போதே அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு சரியாக 8:06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 9:51 மணிக்கு அவர் உயிரிழந்தார்.' எனக் கூறப்பட்டிருக்கிறது.