1. Home
  2. தமிழ்நாடு

8.60 கோடி சிகாமணிக்கு எப்படி வந்தது? இதற்கு மாற்று ரஜினி மட்டும் தான்!

8.60 கோடி சிகாமணிக்கு எப்படி வந்தது? இதற்கு மாற்று ரஜினி மட்டும் தான்!


திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்பியுமான கவுதம் சிகாமணிக்கு, 8.60 கோடி சொத்து எப்படி வந்தது என தமிழருவி மணியன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2008-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்ற பெரும் நிறுவனத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை சிகாமணி வாங்கியுள்ளார். இது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி நடைபெற்றுள்ளது. இது சட்டவிரோத செயல்.

இந்த முதலீடுகள் எல்லாம் கருணாநிதி தலைமையில் அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது நடைபெற்றுள்ளது.அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை காரணமாக கவுதம் சிகாமணியின் 8.60 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சொத்துக்கள் அவருக்கு எப்படி வந்தது என ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த மோசடி எல்லாம் கடந்த 2008-ல் தான் நடந்தது. இவரைத்தான் கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சிகாமணி இன்று சட்டம் இயற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருகிறார்.

நடிகர் ரஜினி சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள் எல்லாம், திமுக எம்பி கவுதம் சிகாமணியின் சட்டத்திற்கு புறம்பான சொத்து விவகாரம் குறித்து கொஞ்சமும் வாய் திறக்கவில்லை.தி.மு.கழகத்தின் தலைவர்கள் அனைவருமே அறத்திற்கு புறம்பாக சொத்துக்களை குவித்து எவ்வித உறுத்தலுமின்றி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பழைய பல்லவியை திமுகவினர் பாடினால் பெரியார் பாணியில் சொன்னால், அவர்கள் "அறிவு நாணயம் இல்லாதவர்கள்" என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.

எனவே, இன்று நமக்குள்ள ஒரே மாற்று மருந்து ரஜினியின் அரசியல் வருகை மட்டுமே என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like