1. Home
  2. தமிழ்நாடு

அது எப்படி காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனை நடந்திருக்க முடியும் ?: எவிடன்ஸ் கதிர்!

1

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் பலர் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். எனவே, உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தினால் 22 பேர் இறந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி தமிழகத்தில் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் இருக்காது என்று சூளுரைத்தார். ஆனால், மரக்காணம் கள்ளச் சாராய மரணங்களை விட தற்போது மூன்று மடங்கு உயரிழப்பு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சி செல்லவில்லை. மாறாக தனது மகன் அமைச்சர் உதயநிதியை அனுப்பி நிவாரணம் வழங்கியுள்ளார்.

முதல்வர் வர முடியாவிட்டால் சமூக நலத்துறை அல்லது அதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை வைத்து இந்த நிவாரண உதவியை வழங்கியிருக்க வேண்டும். விளையாட்டுத் துறை அமைச்சருக்கும், கள்ளச் சாராய இறப்பு சம்பவத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது? இப்படித்தான், இந்த ஆட்சியில் அனைத்து நிர்வாகங்களும் ஒட்டுமொத்தமாக செயலிழந்துள்ளது. இந்த கள்ளச் சாராய மரணத்தை அரசு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி மூடி மறைக்கப் பார்க்கிறது. ஆனால், கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நேரில் ஆய்வு செய்த நாங்கள் அதனை எளிதாக கடந்து செல்ல முடியாது. இந்த கள்ளச் சாராய சம்பவத்தில் ஆளும்கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. இதுதவிர, உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், போலீஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தமிழகத்தில் ‘வீடு தேடி கல்வி திட்டம்’ என்ற நிலை மாறி ‘வீடு தேடி கள்ளச் சாராயம் திட்டம்’ வந்ததுபோல், கள்ளக்குறிச்சி கிராமங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ரூ.60 கள்ளச் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கின்றனர். இந்தக் கள்ளச் சாராய வியாபாரம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தாராளமாக நடந்திருக்கிறது. நிரந்தரமாக 200-க்கும் மேற்பட்டடோர் இப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்றுள்ளனர். கல்வராயன் மலையில் இருந்து லாரி டியூப் மூலமாக சாராயம் கொண்டு வரப்பட்டு அந்த சாராயத்தில் தண்ணீர் கலந்து 160 முதல் 180 பாக்கெட் போடப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு டியூப் சாராயம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் விலையில் கிடைக்கிறது. கள்ளச் சாராயத்தை அப்பகுதியில் 15 முதல் 16 வயதுடைய குழந்தைகள்கூட குடிக்கின்றனர். பொதுமக்கள், கள்ளச் சாராயம் விற்பதாக போலீஸாிடம் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட சாராய வியாபாரிகள், பொதுமக்கள் அளித்த புகாரோடு வந்து அவர்களை மிரட்டுகின்றனர். அப்படியென்றால் ஆட்சி நிர்வாகம் எந்தளவுக்கு தமிழகத்தில் சீர்கேட்டுப்போய் உள்ளது?

மேலும், கள்ளக்குறிச்சி காவல் நிலையம், மாவட்ட நீதிமன்றம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு அருகாமையில்தான் இந்த கள்ளச் சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த மரணங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. சிபிசிஐடி விசாரணை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சாராய மரணங்களை தடுப்பதற்கு அரசு செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.45,865 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இந்த வருவாய், அப்பாவி கட்டிடத் தொழிலாளிகள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் தவிர கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வியாபாரமும் தாராளமாக நடக்கிறது. மதுரையில் கஞ்சா கிடைக்காத கிராமங்களே இல்லாத நிலை உள்ளது. இதை தடுப்பதற்கு அரசு இயந்திரங்கள் முற்றிலும் தவறிவிட்டன. கள்ளச் சாராயத்தை திரைமறைவில் விற்றால் அரசு என்ன செய்ய முடியும்? என கடந்து போய்விடக்கூடாது. உளவுத்துறை போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசை ஏமாற்றுகிறார்களா? அல்லது அரசு தெரிந்து கொண்டே நடவடிக்கை எடுக்காமல உள்ளதா? என்பது போன்ற சந்தேகங்கள் வருகிறது.

இறந்தவர்களில் 54 குடும்பத்தை சேர்ந்தவர்களை எவிடென்ஸ் அமைப்பு நேரடியாக சந்தித்து கள ஆய்வு செய்தது. கள்ளச்சாரயம் குடித்து 19-ம் தேதி காலை 6.30 மணியளவில் சுரேஷ் என்பவர் இறந்து போனார். அவரைத் தொடர்ந்து பிரவீன் என்பவர் 9 மணிக்கு இறந்துள்ளார். ஆனால், இவர்களுக்கு முன்பே, 18-ம் தேதி ஜெயமுருகன், இளையராஜா ஆகியோர் இறந்துள்ளனர். இவர்கள் விவரம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. முதலில் கள்ளச் சாரயம் குடித்து மரணம் அடைந்த 2 தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மறுத்துள்ளது. அதன்பிறகு அந்த 2 பேர் மரணங்களை ஆட்சியரே உள்ளூர் அரசியல் புள்ளிகள் தூண்டுதலால் மறுத்துள்ளார். இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 49 பேர் ஆண்கள். இவர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் 75 வயதுடையவர்கள்.

ஆபத்தான நிலையில் இருக்கும் 25 பேரில் 3 பெண்கள், ஒருவர் திருநங்கை. இதர 21 பேர் ஆண்கள். இவர்களின் குறைந்தப்பட்ச வயது 27; அதிகப்பட்ச வயது 72. சிகிச்சை பெறக்கூடிய 132 பேரில் 4 பேர் பெண்கள். 128 பேர் ஆண்கள். இவர்களின் குறைந்தப்பட்ச வயது 21; அதிகப்பட்ச வயது 75. கள்ளச் சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கள்ளச் சாராய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இறந்துபோன பட்டியலின மக்களுக்கு கூடுதலாக ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like