நீ எப்படி அவளைத் திட்டலாம்... காதலியின் தாயை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்!

முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மைதிலி. 60 வயதான இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவரது மகள் ரித்திகா. 26 வயது இளம்பெண்ணான இவர் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ரித்திகா ஷியாம் (28) என்ற வாலிபரைக் காதலித்து வந்து உள்ளார். இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இது போன்ற நேரங்களில் ரித்திகா இரவில் தாமதமாகவே வீட்டுக்கு வந்துள்ளார்.
இது தாய் மைதிலிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளைக் கண்டித்து வந்துள்ளார். இப்படி வெளியில் சுற்றி விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவது சரி இல்லை.
இந்த வழக்கத்தை மாற்றிக்கொள் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் தாய் மைதிலிக்கும், ரித்திகாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.
ஆனால் தாய் மைதிலியின் அறிவுரையை ரித்திகா காதில் வாங்கி கொள்ளாமல் காதலன் ஷியாமுடன் வெளியில் சுற்றுவதை தொடர்ந்துள்ளார்.
நேற்றும் ரித்திகா, ஷியாமுடன் வெளியில் சென்று உள்ளார். இருவரும் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் இரவு 9 மணி அளவிலேயே ரித்திகா வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மைதிலி மகளைக் கண்டித்துள்ளார். நான் சொல்வதை நீ கேட்கமாட்டாயா? இது போன்று வீட்டுக்குத் தாமதமாக வருவது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியும் ஏன் கேட்க மறுக்கிறாய் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் தாய்-மகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக முற்றியது.
இதனால் கோபம் அடைந்த ரித்திகா தனது காதலன் ஷியாமுக்கு போன் செய்து தாய் திட்டுவது பற்றிக் கூறியுள்ளார். மேலும் உடனே நீ வீட்டுக்கு வா என்றும் அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷியாம் முகப்பேர் கிழக்கில் உள்ள காதலியின் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று தகராறில் ஈடுபட்டார்.
காதலியின் தாய் மைதிலியிடம், “நீங்கள் எப்படி அவளைத் திட்டலாம்” என்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது ஷியாம், மைதிலியை கீழே தள்ளி விட்டுக் காதலியின் கண்முன்னே கழுத்தை நெரித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மைதிலி, ஷியாமின் பிடியிலிருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் ஷியாம் விடாமல் கழுத்தை நெறித்ததால் மைதிலி துடிதுடித்துப் பலியானார். பின்னர் ஷியாம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுபற்றித் தகவல் கிடைத்ததும் ஜெ.ஜெ.நகர் போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய ஷியாமை கைது செய்தனர்.
இது தொடர்பாகக் கொலையுண்ட மைதிலியின் மகள் ரித்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தக் கொலை சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தால் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைதான வாலிபர் ஷியாம் அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் தங்கி இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். அப்போதுதான் ரித்திகாவுடன் காதல் ஏற்பட்டு ஷியாம் கொலை வழக்கில் சிக்கி உள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஷியாமுடன் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.