நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து வருட வருமானமாக ரூ.1 லட்சம் பெறுவது எப்படி?

போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாதாந்திர வருமான திட்டத்தில், நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து வருட வருமானமாக ரூ.1 லட்சம் பெறுவது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என்பது பிற திட்டங்களைப் போலவே மக்களுக்கு வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி வருமானம் வழங்கப்படும். அதாவது இந்த திட்டத்தில் இணைந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உங்களுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்தீர்களோ? அதை அப்படியே பெற்றுக் கொள்ளலாம். இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இதனால் தான் 5 ஆண்டுகளுக்கு வருமானம் வழங்கப்படுகிறது.
MIS திட்டத்தில் நீங்கள் தனிநபர் கணக்கைத் திறக்கலாம் அல்லது வேறு ஒருவருடன் இணைந்து கூட்டு கணக்கைத் திறக்கலாம். 2 அல்லது 3 பேர் சேர்ந்தும் கூட்டுக்கணக்கைத் தொடங்க முடியும். தனிநபர் கணக்கு திறந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதுவே கூட்டுக் கணக்காக திறக்கும் பட்சத்தில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதை வைத்தே 5 ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் பெறலாம். மேலே கூறப்பட்டுள்ள வரம்பு அதிகபட்ச தொகை ஆகும். இதற்கு கீழும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம்.
தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை அரசு காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும். அப்படி கடந்த 3 காலாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மக்களுக்கு பலன் அளித்து வருகிறது.
போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தில் வருட வருமானமாக ரூ.1 லட்சம் பெறுவது எப்படி?
இந்த திட்டத்தில் உங்கள் மனைவியுடன் இணைந்து ரூ. 15 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மாத வருமானமாக 9,250 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். அப்படியானால் வருடத்திற்கு 1,11,000 ரூபாய். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வருமானம் பெற்றால் 5,55,000 ரூபாய் கிடைக்கும். அதன் பிறகு முதிர்வுக் காலம் முடிந்து உங்களுடைய மொத்த முதலீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
தனிநபர் கணக்கில் அதிகபட்சம் தொகையான ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் மாத வருமானமாக 5,550 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் வருடத்திற்கு 66,600 ரூபாய். இதன் மூலம் வெறும் 5 ஆண்டுகளில் 3,33,000 வட்டி வருமானம் பெற முடியும்.