1. Home
  2. தமிழ்நாடு

மோடி அரசுக்கு தியாகிகளின் வரலாறு எப்படி புரியும்..?: கேட்கிறார் கரூர் எம்பி ஜோதிமணி..!

மோடி அரசுக்கு தியாகிகளின் வரலாறு எப்படி புரியும்..?: கேட்கிறார் கரூர் எம்பி ஜோதிமணி..!


குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு நமது தமிழகத்தை, வீர வரலாற்றை தொடர்ந்து அவமதித்து வருகிறது.

வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதி ஆகியோர் சுதந்திரப் போராட்ட நெருப்பில் தமது வாழ்க்கையையே அர்ப்பணித்த மாவீரர்கள், மகத்தான தியாகிகள். அத்தியாகிகளை அவமதிப்பதை மானமுள்ள தமிழினம் ஏற்காது.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலத்தில், ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்து மன்னிப்பு கடிதம் எழுதிய துரோக வரலாறு ஆர்.எஸ்.எஸ் உடையது. அந்த சித்தாந்தத்தால் வழிநடத்தப்படும் மோடி அரசிற்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அருமையும், வரலாறும் எப்படிப் புரியும்..?

குறிப்பாக, நமது தமிழ்நாட்டையும், நமது வரலாறு, மொழி, கலாச்சாரம், தொழில்கள் அனைத்தையும் குறிவைத்து, மோசமான தாக்குதலை மோடி அரசு நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இருந்து நமது தமிழ்நாட்டையும், தமிழினத்தையும் காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் நமது ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தமிழினத்திற்கு எதிரான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தாக்குதலை அச்சமற்று எதிர்கொள்வோம். தமிழக மண் ஈடு இணையற்ற வீரமும், சுயமரியாதையும், மிகுந்தது என நிரூபிப்போம். நமது தொன்மையான வரலாற்றைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like