தமிழ்தாய் வாழ்த்து பாடியதில் நடந்த தவறுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாவார் - எல்.முருகன்..!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளதாக ஆளுநர் குற்றம்சாட்டினார்.
ஆளுநருக்கு முதல்வர் மற்றும் திமுகவினர் பதிலடி கொடுக்க, ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் களமிறங்கி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “இந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடந்த போது கூட திமுக அமைச்சர்களின் துறைகளில் கூட இந்தி மாதம் அனுசரிக்கப்பட்டது.
அதே சமயம் தமிழை பாதுகாப்பதில், தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்வதில் பிரதமர் மோடி முதன்மையாக இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்து வருகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் அது குழந்தைகள் செய்த சிறிய தவறு. அது எல்லோருக்கும் தெரியும். அதற்காக டிடி தமிழ் மன்னிப்பும் கோரிவிட்டது. ஆனால், இந்த விஷயத்தில் ஆளுநரை தொடர்புபடுத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அனைத்து விவகாரங்களிலும் அரசியல் செய்யக்கூடாது.
மழை மீட்புப் பணிகளை திமுக அரசு சரியாக கையாளவில்லை. ஒருநாள் மழையை எதிர்கொள்ளவே சரியான திட்டமிடுதல் இல்லை. இதனை மக்களிடத்தில் இருந்து திசை திருப்பவே தமிழ்தாய் வாழ்த்தை கையில் எடுத்துள்ளனர்.
ஒரு நிகழ்ச்சியில் நடந்த தவறுக்கு அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் எப்படி பொறுப்பாவார்? இதில் இருந்தே அரசியல் செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் திமுக நினைப்பது போல நடக்க இது ஒன்றும் 1960கள் கிடையாது. ” என்று கேள்வி எழுப்பினார்.