1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்: ஜெயக்குமார்!

Q

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக கோஷ்டிகள் ஒவ்வொன்றாக இன்று மரியாதை செலுத்தின. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கறுப்பு உடையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழிகளை ஏற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது கோஷ்டியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் தனித்தனியாக மரியாதை செலுத்தப்பட்டது.
எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எம்ஜிஆரைப் பொறுத்தவரை யாருடனுமே ஒப்பிட முடியாத தலைவர். எம்ஜிஆர் ஜாதி, மத வேறுபாடுகளைப் பார்த்தவர் அல்ல. அனைவரும் போற்றக் கூடிய தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். அண்ணா திமுக என்பது ஜாதி- மதம் கடந்து சமத்துவமாக அனைவரையும் பார்க்கும் இயக்கம். எந்த நிலையிலும் எம்ஜிஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டுவிடவே முடியாது. அதிமுகவின் கொள்கையே பிரிவினையை நாடோம்.. சமநிலையில் வாழ்வோம் என்பதுதான். பாஜகவின் கொள்கை இப்படியா இருக்கிறது? மதத்தால் பிரிவினையை செய்வதுதான் பாஜகவின் வேலை. சமநிலை எங்கே இருக்கிறது? வெண்ணெய் ஒரு கண்ணில்.. சுண்ணாம்பு ஒரு கண்ணில் என்பதாகத்தானே இருக்கிறது? ஆகவேதான் எந்த நிலையிலும் எம்ஜிஆருடன் மோடியை ஒப்பிடவே முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
மேலும் சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணா திமுக நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன் செயல்படக் கூடாது. அவர் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார் என்றார்.

Trending News

Latest News

You May Like