1. Home
  2. தமிழ்நாடு

8000 பேருந்துகள் வாங்காமல் வெறும் 1,000 பேருந்துகள் வாங்கினால் அது எப்படி போதுமானதாக இருக்கும் - சசிகலா..!

1

தீபாவளி நேரத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்திருப்பதாக கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பேருந்துகளை அரசு ஒப்பந்த பேருந்துகள் என ஸ்டிக்கர் ஒட்டி இயக்க திமுக அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இது இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

திமுக அரசு 4வது ஆண்டில் பயணித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு போதுமான எண்ணிக்கையில் பேருந்து வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்காமல், இது போன்ற கண்துடைப்பு வேலைகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்ற சசிகலா, “ தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவதற்காக ஒரு கிமீக்கு ரூ.51 என அரசு பணத்தை செலவழித்து, ஒப்பந்த பேருந்து என ஸ்டிக்கர் ஒட்டி தீபாவளி பண்டிகைக்கு இயக்க திட்டமிட்டுள்ளது” என்று விமர்சனம் செய்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 8,182 புதிய பேருந்துகள் வாங்கப்போவதாக ஆணை பிறப்பித்ததோடு சரி. அதனை செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியதோடு, தமிழகத்தில் வருடத்திற்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய பேருந்துகள் வாங்க வேண்டிய நிலையில், நான்கு வருடம் முடியும் நிலையில், மொத்தமாக வெறும் 1,000 பேருந்துகள் வாங்கினால், அது எப்படி மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறினார்.

மேலும், “தனியார் பேருந்துகள் ஏற்கனவே விடுமுறை காலங்களில் சாமானிய மக்களிடம் அடிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு தற்போது தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதிப்பது தனியார்மயத்தை ஊக்குவிக்கின்ற செயலாகும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும்” என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

எனினும், தீபாவளி நேர நெருக்கடிகளை கருத்தில் கொண்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தும் முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றே கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like