10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத தேஜஸ்வி யாதவால் எப்படி பீகார் மாநிலம் முன்னேறும்..?
பல கட்சிகளுக்கு தேர்தல் உத்திகள் வகுத்து கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தமது அமைப்பை வரும் அக்டோபர் 2ம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
இந் நிலையில், போஜ்புர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரசாந்த் கிஷோர், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது;
எந்த வித வசதிகளும் இல்லாமல் ஒருவர் கல்வி கற்கவில்லை என்றால் அதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால்,சிலரின் (தேஜஸ்வி யாதவ்)பெற்றோர், மாநிலத்தின் முதல்வராக இருந்தும் 10ம் வகுப்பு கூட தாண்டவில்லை என்றால் என்ன சொல்வது? கல்வியின் மீது அவர்கள் கொண்ட அக்கறையை தான் இது காட்டுகிறது.
9வது தோல்வியை பெற உள்ள அவர் பீகார் மாநில வளர்ச்சியை பற்றி சிந்திக்கிறார். ஜி.டி.பி மற்றும் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்கூட அவருக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது பீகார் எப்படி முன்னேறும்?
முன்னாள் முதல்வரின் மகன் என்ற அடிப்படையில் தான் கட்சியில் முன்னிலையில் உள்ளார். அதையும் தாண்டி நற்பெயரை பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைத்து தம்மை நிரூபிக்க வேண்டும்.
வரும் 10ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் அவர், நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க முடியுமா? மாநிலத்தில் ஒட்டுமொத்தமுள்ள மக்கள் தொகையில் 1.97 சதவீதம் உள்ள 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு 5 நிமிடம் எந்த பேப்பரையும் படிக்காமல் சோசலிசம் பற்றி அவரால் பேசமுடியுமா? இதுபோன்ற தலைப்புகளில் பேச அவருக்கு போதிய புரிதல் இல்லை.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.