10 லட்சம் ரூபாய் கடனை 30 நாளில் அடைத்த அமெரிக்க பெண்- எப்படி தெரியுமா?

அமெரிக்காவின் ஜெஸ் என்ற பெண், கடந்த சில வருடங்களில் தனிப்பட்ட செலவுகளுக்காக கிரெடிட் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்தினார். ஆரம்பத்தில் சுலபமாகத் திருப்பிச் செலுத்திய அவர், நாளடைவில் வட்டியின் சுமை அதிகரித்து சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு சமமான கடனாக மாறியது.
கடன் அதிகரிக்க, மாதாந்திர தவணைகளைக் கொடுத்தும் வட்டி மட்டும் அடைக்க முடிந்த நிலை ஏற்பட்டது. வாழ்கை செலவுகள் மற்றும் வீட்டு வாடகை கூட சமாளிக்க முடியாத அவலம் ஏற்பட்டது.
அப்போது சாட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் சேவையை அவர் முயன்று பார்த்தார். "எப்படி 30 நாளில் கடனை அடைப்பது?" என்று நேரடியாக சாட் ஜிபிடி யிடம் கேட்டார்.
சாட் ஜிபிடி, அவரது வருமானம், மாதாந்திர செலவுகள், கடன் விவரம் போன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டது. பிறகு திட்டமிட்ட ஆலோசனைகளை வழங்கியது.
சாட் ஜிபிடி கொடுத்த பரிந்துரைகள்:
முக்கியமற்ற செலவுகளை குறைக்கவும்.
அதிக வட்டி செலுத்தும் கடன்களை முதலில் அடைக்கவும்.
கூடுதல் வேலை வாய்ப்புகள் தேடவும்.
உறவினர்களிடம் வட்டி இல்லாமல் கடன் பெற முயற்சிக்கவும்.
தேவையற்ற சந்தாக்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளை நிறுத்தவும்.
சிறு தொகை கூட கடனுக்கு கூடுதலாக செலுத்தவும்.
ஜெஸ் எடுத்த முடிவுகள்
ஜெஸ் இதை முழுமையாக கடைபிடித்தார். வீட்டுக்குள் அனைத்து செலவுகளையும் கடுமையாகக் கட்டுப்படுத்தினார். வீட்டு செலவுகள், உணவுப்பட்டியல் என அனைத்தையும் சுருக்கினார்.
அதோடு, கூடுதல் நேரங்களில் ஆன்லைன் பாடங்கள் கற்றுக்கொடுத்தார், குழந்தை பராமரிப்பு வேலை, வீட்டு சுத்தம் போன்ற சிறு வேலைகளை செய்து வருமானம் சேர்த்தார்.
30 நாட்களில் சுமார் 4000 அமெரிக்க டாலர் (3.3 லட்சம் ரூபாய்) கூடுதல் பணம் சம்பாதித்தார். மேலும் அவரது குடும்பத்தினர் 3000 டாலர் (சுமார் 2.5 லட்சம் ரூபாய்) வட்டி இல்லாமல் கடன் கொடுத்து உதவினர். ஏற்கனவே சேமித்திருந்த தொகையையும் சேர்த்து, கடன் தொகையை முழுமையாக அடைத்தார்.
ஜெஸ் தனது அனுபவத்தை டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். “சாட் ஜிபிடி என் வாழ்க்கையை மாற்றியது” என உருக்கமாக நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி, லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பாராட்டினார்கள். சிலர் சாட் ஜிபிடி-யை தங்களது நிதி ஆலோசகராக பயன்படுத்துகிறோம் என்றும் பகிர்ந்தனர்.
இந்த சம்பவம் சாட் ஜிபிடி ஆலோசனை மட்டுமல்ல, ஜெஸ் எடுத்த கடுமையான கட்டுப்பாடு, திட்டமிட்ட செயல், கூடுதல் வேலைகள், உறவினர் உதவி போன்ற பல காரணிகளால் முடிந்தது. ஏஐ யை நிதி ஆலோசனைக்குப் பயன்படுத்தலாம், ஆனால் கடுமையான முயற்சி, தன்னம்பிக்கை இல்லாமல் வெற்றி சாத்தியமல்ல என்பதே இதன் உண்மை பாடம் என்று கூறலாம்.