இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! இந்த மாநிலத்தில் தக்காளி விலை கிலோ 250 ரூபாயாம்..!
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், மக்கள் கவலை அடைந்தனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனிடையே தக்காளி விலை சற்று குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி தாம் பகுதியில் கிலோ ஒன்றுக்கு ரூ. 250 ஆகவும், உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ. 180 முதல் ரூ. 200 ஆகவும் விற்பனை ஆகிறது.
காய்கறி விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது, உத்தரகாசி பகுதியில் திடீரென தக்காளி விலை உயர்ந்துள்ளது. உத்தரகாசியில் தக்காளி விலை உயர்ந்து வருவதால் நுகர்வோர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். மக்கள் அவற்றை வாங்க கூட தயாராக இல்லை. கங்கோத்ரி, யமுனோத்ரியில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் 250 வரை விலை விற்பனை ஆகிறது என்று காய்கறி விற்பனையாளர் ராகேஷ் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
அதிக அளவில் தக்காளி பயிரிடும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கனமழை காரணமாக விநியோகச் சங்கிலியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே, காய்கறிகளின் விலை கடுமையாக உயர வழிவகுத்துள்ளது என்று பலர் கூறுகின்றனர்.
பிற மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் சமீப நாட்களாக தக்காளியின் விலை உயர்வை அடைந்துள்ளது. பெங்களூருவில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.101 முதல் 121 வரை விற்பனை ஆகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட திடீர் வெப்பநிலை அதிகரிப்பு, தக்காளி விளைச்சலில் பூச்சித் தாக்குதல் மற்றும் சந்தை விலை உயர்வு ஆகியவற்றால் தான் தற்போது தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.