அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! ஒரே வாரத்தில் பூண்டு விலை ரூ.150 வரை உயர்வு..!
பூண்டு விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேபோல, வெங்காயம் விலையும் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெங்காயம், பூண்டு மட்டுமல்லாமல், இஞ்சி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி விலை 80 கிலோ அதிகரித்து, ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு மிக முக்கியமான பொருட்களான வெங்காயம், இஞ்சி, பூண்டு விலை உயர்ந்துள்ளது சமையலுக்கான செலவுகளை அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பங்களிலும் சமையலுக்கான பட்ஜெட் அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் நிலவிய கடும் வெப்பம் , அதன் பின் பெய்த கனமழை போன்ற காரணங்களால் அங்கு விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கான பூண்டு வரத்து என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பூண்டின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பூண்டு உள்ளிட்ட உணவு பொருள்களின் விலை ஏற்றத்தால் குடும்ப பெண்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
பூண்டு விலை ஏற்றம் குறித்து சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் கூறும்போது, பூண்டு வரத்து குறைந்துவிட்டது. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் தமிழகத்திற்கான வரத்தும் குறைந்து வருகிறது. இதனால் பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இருநூறு ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பூண்டின் விலை தற்போது ஒரு கிலோ 320 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனையாகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் பூண்டின் விலை 450 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.