இல்லதரசிகள் அதிர்ச்சி! விண்ணை முட்டுது தக்காளி விலை!
வழக்கமாக, கோடை அல்லது மழை காலம் துவங்கினால் சில காய்கறிகளின் விலை உயரும். மேலும், வரத்து குறைவு, பண்டிகை நாட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும் விலையில் மாற்றம் இருக்கும். இப்போது புரட்டாசி மாதம் என்பதால், அனைத்து காய்கறிகளின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இரு மாதம் முன் கிலோ ரூ.20க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை, இப்போது தாறுமாறாக அதிகரித்துள்ளது. சென்னையில் பல இடங்களில் சில்லறை விற்பனை கடைகளில் விலை ரூ.100 என்ற நிலையைக் கடந்தும் விற்பனையாகிறது.
வியாபாரிகள் கூறுகையில், ‘மழை காரணமாகத் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ரூ.20 முதல் ரூ.30 வரை விற்று வந்த தக்காளி, தற்போது, ரூ.100 என்ற விலைக்கு மேல் விற்பனையாகிறது,’ என்றனர்.
கோயம்பேட்டில் தக்காளியின் குறைந்தபட்ச விலை ரூ.60 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.76ஆகவும் தமிழக அரசுப் பட்டியல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர்.