இல்லத்தரசிகள் ஷாக்..! தேங்காய் விலை கிலோ ரூ. 70 ஆக உயா்வு..!
நாடு முழுவதிலும் இருந்து, சபரிமலைக்கு அதிகளவு பக்தர்கள் செல்வதால், தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது.ஐயப்ப பக்தர்கள், நெய் தேங்காய், இருமுடி கட்டுதலுக்கு தேங்காய் அதிகளவில் வாங்குகின்றனர்.
கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களும் சபரிமலை சீசன் என்பதால், தேங்காய் தேவை அதிகரித்துள்ளது.கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், மார்க்கெட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது.தற்போது, வழக்கமான தேங்காய் வரத்தில், 20 - 30 சதவீதம் மட்டுமே உள்ளது. தேங்காய் சீசன் இல்லாத காலம் என்பதால், வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ. 45 க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் விலை படிப்படியாக அதிகரித்து கடந்த வாரம் கிலோ ரூ. 55 ஆக உயா்ந்தது. தற்போது விலை மேலும் அதிகரித்து ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனையாகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒரு டன் தேங்காய்க்கு, 5,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். விலை உயா்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயா்ந்துள்ளது. இனி வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் என்றாா்.